ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்திவிடுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் 62 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் உயரவேண்டும் அவர்களும் முதலாளிகளாக ஆகவேண்டும் என்பதற்காக பல நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஜிஎஸ்டியில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் சென்னைக்கு வந்த போது ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டார். ஜிஎஸ்டியின் வாயிலாக ரூ.9,602 கோடி அதை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று பிரதமரே மேடையில் கூறி விட்டார் என்றார்.
தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாப புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவை பார்ப்பதற்குத் தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள். ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்து இருக்கிறது. ஆதீனத்தை நேரில் வர சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய அழிவுக்கு அது தான் காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
மேலும், வடபழனி முருகன் கோவிலில் 5.5 ஏக்கர் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். இதே 2007ல் இந்த இடத்தை குத்தகைக்கு விட்டவர்களே நீங்கள் தான். தப்பித் தவறி கூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள். விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மருத்துவ சீட் 66 ஆயிரம் சீட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் எட்டு ஆண்டுகளில் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதே நமது இலக்கு. ஹிந்தி கண்டிப்பாக திணிக்கப்படாது. எனக்கு ஹிந்தி தெரியாது. டெல்லி வந்து தான் ஹிந்தியை கற்றுக் கொண்டேன் என்று பிரதமர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்துள்ளது.








