ஓசூர் அருகே ஆடு மொத்த வியாபாரியை போலீசார் எனக்கூறி காரில் கடத்தி சென்று ரூ.25 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், புலியனேரி பகுதியை சேர்ந்த சரவணன்(47). இவர் மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில் நுாற்றுக்கணக்கான ஆடுகளை மொத்தமாக வாங்கி அதனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வார சந்தையில் விற்று மீதமாகும் ஆடுகளை இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்து 20 ஆண்டுகளாக செய்து வருகிறார். வழக்கம் போல் அவர் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 13 நபர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி ஒசூர் அடுத்த பத்தளப்பள்ளிக்கு பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் ஆடு விற்ற பணத்தை வசூலிக்க சென்ற போது நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 பேர் வந்து சரவணனை கஞ்சா விற்கிறாயா என்று கேட்டு விசாரிக்க வேண்டும் எனவும், உயர் அதிகாரியிடம் அழைத்து செல்வதாக கூறி கடத்தி சென்று 25 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக்கொணடு அவரை உத்தனப்பள்ளி அடுத்த அகரத்தில் இறக்கி விட்டு திருட்டு கும்பல் பணத்துடன் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து சரவணன் அட்கோ காவல்நிலையத்தில் தனது பணத்தை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் விசாரணை நடத்தியும், 4 பேர் கொண்ட திருட்டு கும்பலை தேடியும் வருகின்றனர்.
அனகா காளமேகன்






