“ஜெயிலர்” படத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சசர்ஸ் அணியின் ஜெர்சியை பயன்படுத்திய காட்சியை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியின் ஜெர்ஸி அணிந்து குணச்சித்திர நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளில் ஜெர்சி அணிந்திருந்த ஒருவர் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சில கருத்துக்களை திரைப்படத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
இது தங்கள் அணியின் நற்பெயரை கெடுக்கும் எனக் கூறி ஐபிஎல் அணியான ஆர்சிபி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓ டி டி தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.







