நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது. இவர் மும்பை பாந்திராவில் வசித்து வருகிறார். இங்கு தான் அவரது அலுவலகமும் உள்ளது. இந்நிலையில், அவர் அலுவலகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில், “பிரபல தாதா கோல்டி பிரார் பிரச்சினையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார். அவரை சந்திக்கவில்லை எனில் நீங்கள் அதிர்ச்சிகரமான சம்பவத்தை பார்ப்பீர்கள்” என மிரட்டல் விடுவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிக்கவும் : பங்குனி உத்திர திருவிழா; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
இதுகுறித்து நடிகர் சல்மான்கான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இ-மெயில் ரோகித் கார்க் என்ற பெயரில் வந்து இருந்தது. மிரட்டல் இ-மெயில் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, தாதாக்கள் லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார் மற்றும் ரோகித் கார்க் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நடிகர் சல்மான்கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மிரட்டல் இ-மெயில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜஸ்தான் விரைந்த மும்பை போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் ஜோத்பூரில் உள்ள சியாகோ கி தானி ஊரை சேர்ந்த தாகட் ராம் பிஷ்னோய் (வயது21) என்பவரை கைது செய்தனர். இவர் தான் ரோகித் கார்க் என்ற பெயரில் சல்மான் கானுக்கு மிரட்டல் இ-மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் விசாரணைக்காக மும்பை அழைத்துவர உள்ளனர்.







