வானில் நாளை நிகழப்போகும் அதிசயம்: வரிசைக்கட்டி நிற்கப் போகும் 5 கிரகங்கள்?

இந்த வாரம் வானில் அதிசயம் நிகழப் போவதாக வானியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன. இந்த வாரத்தில், அதிலும்…

இந்த வாரம் வானில் அதிசயம் நிகழப் போவதாக வானியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன. இந்த வாரத்தில், அதிலும் குறிப்பாக நாளை இந்த கிரக வரிசையைக் காண முடியும்.

இந்த அதிசயத்தை காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார் நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக்.

இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும். ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், ‘ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம்’ தவறிவிடும்.

சூரியன் மறைந்த அரை மணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வானம் தௌிவாக இருக்கும் நிலையில், மேற்குப்புறத்தை நன்றாக காணமுடியும் சூழலில் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாம் என்கின்றனர்.

வெறுங்கண்ணால் இந்த கிரகங்களை காண முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் விளக்ம் அளித்துள்ளனர். அதிர்ஷ்டமிருந்தால், முடியும் என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றைக் காண்பது ஓரளவு எளிது என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அதிலும் வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும், செவ்வாய்க்கிரகம், நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். ஆனால் புதனும், யுரேனசும் கொஞ்சம் ‘டல்’ அடிக்கக் கூடியவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் சிரமம்.

தொலைநோக்கி இருந்தால் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். அதிலும், காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பாக இது இருக்கும். வெள்ளிக்கு மேலே அது, பச்சையாக மிளிரும் என்கிறார் நாசா விஞ்ஞானி குக்.

இது போல பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் வரிசையாக தோன்றுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகும். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஜூனில் நடந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.