இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்தின கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க அதிகாரிகளின் தனிப்படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த நைமுதீன் (வயது24) என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில், சென்னைக்கு வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி, விசாரித்தனா். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரை முழுமையாக பரிசோதித்தனர்.
ஆனால் எதுவும் இல்லை. இருந்தாலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது எழுந்த சந்தேகத்தால், அவரை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது, அவர் வயிற்றுக்குள் ஏதோ விழுங்கி வந்துள்ளது தெரியவந்தது. இதை அடுத்து அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இனிமா கொடுத்து அவர் வயிற்றுக்குள் விழுங்கியதை, சிறிது சிறிதாக வெளியில் எடுத்தனர்.
அவருடைய வயிற்றுக்குள் சிறுசிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தின கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. மொத்தம் 1,746 ரத்தின கற்களை விழுங்கி கடத்தி கொண்டு வந்திருந்தார். அதன் மொத்த எடை 8,309 காரட் உள்ளது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 94.34 லட்சம். ஆனால் இந்தியாவில் இந்த ரத்தின கற்கள் மதிப்பு, சுமார் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பயணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இந்த ரத்தின கற்களை, சென்னையில் யாரிடம் கொடுக்க கடத்தி வந்தார்? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
– இரா.நம்பிராஜன்








