சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும் என நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்ததைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அம்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மத்திய, மாநில அரசுகள் வரிகளை உயர்த்துவதில்தான் கவனம் செலுத்துவதாகவும், வருமானத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். மின் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுகவும் பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நாடகம் ஆடுவதாக விமர்சித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சாதியையும், அறிவையும் தொடர்புபடுத்தி பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேட்டபோது, ரஜினிகாந்தின் பேச்சுக்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். பணம், புகழ், பெயர் இருந்தும் தனக்கு 10 சதவீதம்கூட நிம்மதி கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் பேசியதை சுட்டிக்காட்டிய சீமான், இது போன்ற தவறான சிந்தனை இருந்தால் நிம்மதி எப்படி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.







