பாகனேரி புல்வநாயகி அம்மன் திருக்கோவில் ஆனி மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை, மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ புல்வநாயகி அம்மன் திருக்கோயிலில் ஆனி மாத உற்சவ
பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில்
திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான
ஒன்பதாம் திருநாளில் திருத்தேரோட்ட வைபவம் நடைபெற்றது. முன்னதாக
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் உற்சவர் புல்வநாயகி அம்மன் சர்வ
அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம்வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ரெ. வீரம்மாதேவி







