கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வட மாநில இளைஞர்கள் பட்டப்பகலில் போலீசிடம் துப்பாக்கியை காட்டி இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த இடப்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் சிந்து. ஆசிரியையாக பணி புரியும் இவர் காலை தனது காரில் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். கார் டிரைவர் சிந்துவை பள்ளியில் இறக்கி விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கேட்டுகள் திறந்து கிடந்துள்ளன. உள்ளே சென்று பார்த்தபோது வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அவவர்களை தடுத்து நிறுத்திய போது இந்தி மொழியில் பேசி கொண்டு வெளியேறி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு தப்பி சென்றனர்.
தொடர்ந்து இது குறித்து வஞ்சியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வஞ்சியூர் பகுதியில் உள்ள இருசக்கர உதிரி பாக கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய கொள்ளையர்கள் அங்கு இரு சாக்கர வாகனத்திற்கு உதிரி பாகங்கள் கேட்டுள்ளனர். வாங்கி விட்டு திரும்பு போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து திருடர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.







