ஏடிபி ஆடவர் டென்னிஸ் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறுமா?-விளையாட்டுத் துறை அமைச்சர் விளக்கம்

சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியான ATP தொடர் மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு…

சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியான ATP தொடர் மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்ந்து
நடைபெற அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான டென்னிஸ் மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் :-

உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில்
வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு
நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

இந்த மைதானத்தில் தற்போது 3 கோடி ரூபாயில் நவீன மின்விளக்கு வசதி, ரூ.1.5 கோடி
செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5 க்குள் முழுமையாக
மைதானம் தயார் செய்யப்படும்.

21 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் நடைபெற்று வந்த ஆடவர் டென்னிஸ் போட்டியான ATP தொடர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது. இந்த போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கையையும் அரசு நிச்சயம்
மேற்கொள்ளும்.

தமிழ்நாடு டென்னிஸ் அஸோஸியேஷன் உடன் இணைந்து அரசு புதிய டென்னிஸ் மைதானங்களை அனைத்து 21 மாநகராட்சிகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி போல் தமிழகம் வரவுள்ள டென்னிஸ் வீரர் வீராங்கனைகளை தமிழர் பாரம்பரிய உபசரிப்போடு வரவேற்க தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.

தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி
பெற்ற தமிழக அணியை அரசு நிச்சயம் அழைத்து கௌரவிக்கும். மேலும் கிரிக்கெட்
போட்டிகளில் மாற்று திறனாளிகளுக்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.