பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம்!

புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக வசதிக் குறைவு காரணமாக தற்போதைய தலைமைச் செயலகமான ஜார்ஜ் கோட்டைக்குப் பதிலாக ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, புதிய தலைமைச் செயலகம் கட்ட சென்னை பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் நிலம் என மொத்தம் 23.50 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.