தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் தொடக்கம் – விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக பங்கேற்பு!

தவெக கூட்டணி கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னை பனையூரில் தொடங்கியது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம் கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த இடதுசாரிக் கட்சிகளான சிபிஐஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்தன.

இந்த நிலையில், தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளின் அலுவலகங்களுக்குச் சென்று அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து, தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தவெக கூட்டணிக் கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், அமைச்சர் வன்னி அரசு ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், தாரகைகதபட் ஆகியோரும், ஐயூஎம்எல் சார்பில் தலைவர் காதர் மொகிதீன், அமைச்சர் ஷாஜகான் மற்றும் சையது ஃபாரூக் பாஷா ஆகியோரும், மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்தும், கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்தும், மேலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், 2029 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.