மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி ஓய்வறை, கழிப்பறை அமைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறை, கழிப்பறை அமைத்து கொடுக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கென, தனி ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர்களுக்குப் போதிய ஓய்வறைகள், சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வியல் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண் வழக்கறிஞர்களுக்கான தனி ஓய்வறைகள் இல்லாததைத் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி, தேவையான இடங்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும், நிலம் ஒதுக்கியும் இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த பணிகளுக்கு உயர் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புக் குழுக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கான பொறுப்பு இந்தியத் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த உத்தரவை செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்று, அவற்றைத் தொகுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.