நாமக்கல்லை உறைய வைத்த மூதாட்டி கொலை வழக்கு – இருவர் கைது!

நாமக்கல் மூதாட்டி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே சித்தம்பூண்டி குளத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மனைவி சாமியாத்தாள் (67). ராசப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா என்ற மகன், மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் மூதாட்டி சாமியாத்தாள் மட்டும் தோட்டது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 7ம் தேதி இரவு சாமியாத்தாள் வீட்டு வாசலில், கட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது, நள்ளிரவு 1:30 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள், சாமியாத்தாள் வாயை பொத்தி கழுத்தில் நகையை தேடினர். நகை இல்லாததால் தங்கச்சங்கிலியை கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். சுதாரித்த நபர்கள் கத்தியால் மூதாட்டி கழுத்து, வாய், முகத்தில் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து செய்தனர். அவர்களை மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சிலர் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதியோர்களை கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.