எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள…

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகின்றன. இதுதொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகிறார்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து நிதிஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று, பாஜகவுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக பல தலைவர்களையும் சந்தித்து நிதிஷ்குமார் பேசினார்.

இதையடுத்து நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் இந்திய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என பேசப்பட்டது. இந்த நிலையில், ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தின் காரணமாக, ஆலோசனை கூட்டத்தை தள்ளி வைக்க திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த கோரிக்கையை ஏற்று ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜூன் 15-ம் தேதி இந்தியா திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.