ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து! சரக்கு ரயில் தடம் புரண்டதால் மீண்டும் பரபரப்பு!

ஒடிசாவின் பார்கார் ரயில் நிலையம் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த…

ஒடிசாவின் பார்கார் ரயில் நிலையம் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், நேற்றிரவு இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வரும் நேரத்தில், இன்று மீண்டும் ஒடிசாவின் பார்கார் ரயில் நிலையம் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் மீண்டும் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சரக்கு ரயில் தனியார் ஆலைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்கார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அதில் ஒரு சிமெண்ட் ஆலையில் இருந்து சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வரும் வழியில் அந்த கட்டட வளாகத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ரயிலில் ஏற்றிவரப்பட்ட மூலப்பொருட்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. வேறு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தண்டவாளத்தில் இருந்து விலகிய 5 ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.