சிறுமி கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம்; பெற்றோரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் விளக்கம்

ஓட்டேரி காவலரின் மகள் பிரதிக்ஷாவுக்கு கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமைக்…

ஓட்டேரி காவலரின் மகள் பிரதிக்ஷாவுக்கு கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் கோதண்டபாணியின் பத்து வயது மகள் பிரதிக்ஷாவுக்கு கால் பாதம் அகற்றப்பட்டது. உப்பு நோய் ஏற்பட்டதால் மகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் கால் பாதத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காவலர் கோதண்டபாணி குற்றம் சாட்டியுள்ளார். மகளுக்கு நீதி வேண்டி சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாக அவர் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தற்போது தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தக் கோரி ஓட்டேரி போலீசார் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு கடிதம் அனுப்பினர். துறை ரீதியான விசாரணை முடிந்த பிறகு அந்த அறிக்கையை ஒப்படைக்குமாறும் மருத்துவக் கல்வி இயக்ககத்தை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி பதவி பறிப்பு; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – ஏராளமானோர் கைது!

இந்நிலையில், இதுகுறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக விளக்கமளித்த ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், “குழந்தை பிரதிக்ஷாவுக்கு நெஃப்ராடிக்ஸ் என்ற சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. குழந்தைக்கு ரத்தம் உறைதல் தன்மை ஏற்படுவதால், கால் வீக்கம், உடல் வீக்கம்
மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

ரத்தம் உறைதலை தடுப்பதற்காகவும், சிறுநீரகம் சரியாக செயல்படவும் கொடுக்கப்பட்ட
ஸ்டீராய்டுகள் பயன் அளிக்கவில்லை. காலுக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்கள் சரியாக செல்ல முடியாததால் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு கிருமி தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பெற்றோரின் அனுமதியுடன்தான் அவருக்கு காலுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த குழந்தைக்கு நான்கு முறைக்கு மேல் சிகிச்சையானது அளிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் வரும் பொழுதெல்லாம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். பிரதிக்ஷாவின் தந்தை கோதண்டராமனிடம் மருத்துவர்கள் சார்பில் முழு விளக்கம் அளிக்கப்பட்டது. மீண்டும் இதுகுறித்து விளக்கம் அளிக்க மருத்துவர்கள் தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.