வடமாநில தொழிலாளியிடம் அண்ணன் மகளை திருமணம் செய்து தர கேட்ட மற்றொரு வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே மேக்கோடு பகுதியில் சோபிதராஜ் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சோம்போ மற்றும் அனில்வர்மன் ஆகியோர் பணியாற்றிவந்துள்ளனர். இந்நிலையில் அனில்வர்மனின் அண்ணன் மகளை சோம்போ திருமணம் செய்ய விரும்பியுள்ளார் . இதுகுறித்து அனில் வர்மனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சோம்போவை அனில் பர்மன் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதனால் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே சோம்போ உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் கொலைசெய்துவிட்டு தப்பி ஓடமுயன்ற அனில் வர்மனை கைது செய்தனர். மொழிப் பிரச்னை காரணமாக அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. விசாரணைக்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பணிக்காக வந்த இடத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







