விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்காகப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தது லைகா. அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் தாமதமாக தொடங்கியது. படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாக துவங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கார் சேசிங் காட்சி ஒன்றில் அஜித் டூப் போடாமல் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் கைகளை கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு, அஜித் காரில் செல்லும் போது, கார் தலைகீழாக கவிழ்கிறது. இந்த காட்சியில் அஜித் நடித்து முடித்ததும் இயக்குநர் ஓகே என சொல்லியவுடன் காரில் உள்ள அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரையும் மீட்க படக்குழுவினர் பதறியடித்து கொண்டு ஓடுகிறார்கள். இந்த காட்சியில் அஜித் டூப் எதுவும் இல்லாமல் நடித்து மெர்சல் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வரும் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் அஜித் இப்படத்திற்காக எடுத்துள்ள ரிஸ்க்கையும் கண் முன் காட்டியுள்ளது.
https://twitter.com/SureshChandraa/status/1775790879388963239
இன்னும் ஓரிரு வாரங்களில், ‘விடாமுயற்சி’ படம் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.







