மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
மேலும் கர்நாடாக அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதல் வழங்ககூடாது என வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமையில்லை என தெரிவித்துள்ள கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரிக்கும் முழு உரிமை உண்டு என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடகாவிற்கு கடும் கண்டனங்கள்!! pic.twitter.com/lb9i906FWJ
— O Panneerselvam (@OfficeOfOPS) June 16, 2022
தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் நீரை தடுத்து நிறுத்தும் வகையில் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா சொல்லும் போது, அதனை எதிர்க்கின்ற உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு என கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு மேகதாது அணை குறித்து பேச உரிமை இல்லை எனக்கூறும் கர்நாடக முதலமைச்சரின் கூற்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது மட்டுமின்றி, கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறுவது ஆணையத்தின் அதிகார வரம்பை மீறிய செயலாகும்.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது குறித்து விவாதிப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.







