அசாமில் கடும் நிலச்சரிவு – 6 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் அசாம் மாநிலத்தை கடும் மழை மற்றும் வெள்ளம் புரட்டி போட்டது.…

அசாம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் அசாம் மாநிலத்தை கடும் மழை மற்றும் வெள்ளம் புரட்டி போட்டது. இந்த பாதிப்பிலிருந்து மாநிலம் மெள்ள மீண்டு வந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக கோல்பரா நகரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 சகோதரர்கள், 1 சிறுமி என மூன்று பேர் உயிருடன் நிலத்தில் புதைந்தனர். துர்திஷ்டவசமாக இவர்களை காப்பாற்ற முடியாததால் பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர். மூவரின் உடலும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதில் இவர்கள் இடிபாடுகளுடன் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணியினை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டனர். ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

கடும் வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் அசாமில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேகலாயவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH06 நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல டிமா ஹசாவ் மாவட்டம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்பு பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தாமுல்பூர் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மட்டும், சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.