11ஏ இருக்கையின் அதிர்ஷ்டம்…கடந்த கால விமான விபத்து – உயிர்பிழைத்தவரின் வியப்பூட்டும் தகவல்!

கடந்த கால விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர், அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷ் அமர்ந்திருந்த அதே எண் கொண்ட இருக்கையில் தானும் அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம்(ஜூன்.12) லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், அருகில் இருந்த பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து பற்றிய காரணம் அறிய விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டு, தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த  விபத்தில் 11ஏ இருக்கையை முன்பதிவு செய்திருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் நூலிழையில் உயிர் தப்பினார். இவர் தற்போது அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் ஏர் இந்தியா 171 விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷின் செய்தியை அறிந்த, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான ருவாங்சக் லோய்ச்சுசக், 27 வருடங்களுக்கு முன்பு இதே போல் ஒரு விமான விபத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்து தானும் உயிர் தப்பியதாக வியப்பூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.

https://www.facebook.com/share/p/19SK6GRAze/

இது தொடர்பாக அவரின் பதிவில், “இந்தியாவில் விமான விபத்தில் இருந்து தப்பியவர், நான் அமர்ந்திருந்த அதே இருக்கை எண்ணில் அமர்ந்திருந்தார். இழப்புகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

https://www.facebook.com/share/p/1EZLx9Z9Rn/

இருவாங்சக் லோய்ச்சுசக், கடந்த டிசம்பர் 1998 ஆம் ஆண்டு தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் TG261-ல் பயணித்தபோது, அந்த விமானம் ​​தெற்கு தாய்லாந்தில் நிலைதடுமாறி ஒரு சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.  அதில் பயணித்த 146 பேரில் 101 பேர் உயிரிழந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.