மணிப்பூர் வீடியோ கொடூரம் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காதது ஏன் என கேள்வியெழுப்பிய திருச்சி சிவா, பிரதமர் அவைக்கு வந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரையில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று காலை தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் 31 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கூட்டம் தொடங்கியவுடன் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூட்டம் தொடங்கிய உடனேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பிரதமர் மணிப்பூர் விவகாரம் குறித்து மவுனம் காப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் பொறுப்பில் இருந்து என்ன செய்கிறார் மோடி? நாட்டின் உச்சபட்ச அமைப்பு செயலில் உள்ள போது, பிரதமர் ஏன் விளக்கமளிக்கவில்லை?. பிரதமர் அவைக்கு வந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரையில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








