மணிப்பூர் வீடியோவை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் வீடியோவை கண்டித்து, குறிப்பாக இரு பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டு வருகின்றனர்.
மணிப்பூர் பெண்களின் நிலை கண்டு பிரதமர் மோடி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார் என்றும் மோடி அரசின் இந்தக் கோழைத்தனம் வரலாற்றில் நினைவுகூரப்படும் என்றும் தேசிய மகளிர் காங்கிரஸின் செயல் தலைவர் நெட்டா டிசோசா தெரிவித்தார்.









