தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரம் – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் உறுதி!

தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார். அகில இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் ஜூன் 6…

தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.

அகில இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் ஜூன் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மூன்று ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த போட்டி என்பதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தமிழ்நாட்டில் இருந்து 127 மாணவர்கள், 120 மாணவியர்கள் என மொத்தம் 247 பேர் பங்கேற்பதாக இருந்தனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணத்தினாலும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணத்தினாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து அறச்சீற்றம் பகுதி வாயிலாக நியூஸ் 7 தமிழ் விரிவாக அலசியது.

தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் தங்கம் வெல்வோருக்கு 2 லட்சம் ரூபாய், வெள்ளி வெல்வோருக்கு 1.50 லட்ச ரூபாய், வெண்கலம் வெல்வோருக்கு 50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் உலக அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தினால் தகுதி இருந்தும் வாய்ப்பை இழந்து விட்டதாக போட்டியில் பங்கேற்க இருந்த மாணவி ஒருவர் உருக்கமாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோகுலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தேசிய அளவிலான போட்டிகள் குறித்து முறையான தகவல் வரவில்லை என்று கூறிய அவர், 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், தேசிய அளவிலான போட்டிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.