தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் சீரானது..!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை முதல் முடங்கியிருந்த, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் பிற்பகலில் சீரடைந்தது. இந்தியாவில் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் உதவுகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை முதல் முடங்கியிருந்த, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் பிற்பகலில் சீரடைந்தது.

இந்தியாவில் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் உதவுகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மற்றும் ரயில் டிக்கெட்டுகளின் நிலை குறித்து அறிய இந்த இணையதளம் பெரிதும் உதவி வருகிறது.இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதள சேவை திடீரென முடங்கியது. இதனால் காலை10 மணியளவில் விரைவு ரயில்கள், மற்றும் பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவும், 11 மணியளவில் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் சூழலில் அவற்றை முன்பதிவு செய்ய இயலாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி தனது டிவிட்டர் வாயிலாக பதிவு ஒன்றை வெளியிட்டது. அந்த பதிவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறிப்பிட்ட இணையதளம் மற்றும் செயலி தற்காலிகமாக இயங்கவில்லை என்றும், அதற்கு மாற்று ஏற்பாடாக அமேசான், மேக் மை டிரிப், உள்ளிட்ட இணையதளம் வழியாகவும், இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தி பொதுமக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும், இதற்கு பயனாளர்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்நுழையலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்திருந்தது. மேலும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகளில் நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

இந்த நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரச்னையை சரி செய்துவிட்டதாகவும் முன்பதிவு வசதி மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இணையதளம் மட்டுமல்லாமல் கைப்பேசி செயலியும் வழக்கம் போல இயங்குவதாகவும், இணையதளம் செயல்படாததால் மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.