விசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்

கனியாமூரில் நடைபெற்றுவரும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும் என்று காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து…

கனியாமூரில் நடைபெற்றுவரும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும் என்று காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.
சின்னசேலம் பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மீது தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வன்முறை கண்டிக்கத்தக்கது. கவலரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ காட்சிகள் வைத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். முகாந்திரம் இல்லாமல் ஆசிரியர்களை கைது செய்ய முடியாது. பொருட்களை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறப்படும்.

அப்பகுதியில் இருப்பவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.

முன்னதாக, கனியாமூரில் உள்ள சக்தி மேல்நிலை பள்ளி வளாகத்துக்கு முன்பு இன்று காலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. இதில் போலீஸார் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

காவலர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கி போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால், சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறை வெடித்துள்ளால் சின்னசேலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வன்முறையில் காவல் துறை உயரதிகாரிகளும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.