தமிழகத்தில் இனி வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் – வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்

தரைக்காற்று மற்றும் கடல்காற்று ஒன்றிணைந்து வீசுவதால் சென்னையில் கோடை மழை பெய்து வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தென்மண்டல வானிலை ஆய்வு…

தரைக்காற்று மற்றும் கடல்காற்று ஒன்றிணைந்து வீசுவதால் சென்னையில் கோடை மழை பெய்து வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் என்ற அடிப்படையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். அதேபோல் ஜூன் மாதத்தில் வெயில் 33 முதல் 37 டிகிரி வரை பதிவாகும். சில நேரங்களில் 40 டிகிரி வரை வெயில் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு 14 நாட்கள் ஜூன் மாதத்தில் 40 டிகிரியை கடந்து வெயில் பதிவானது. 2005 -ல் 10 நாட்கள் வரை 40 டிகிரியை கடந்து
வெயில் பதிவாகியுள்ளது.

தற்போது அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலால் தரைக்காற்றில் மாற்றம் ஏற்பட்டு, காற்றின் ஈரப்பதத்திலும் மாற்றம் ஏற்பட்டு, தென்மேற்கு திசையை காட்டிலும் வடமேற்கு திசையில் திசைக்காற்று அதிகமாக வீசுவதாலும், கடல் காற்று குறைவாக வீசுவதாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவி வருவதாகவும், தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு காற்றினில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னல் கூட்டங்கள் ஒன்றிணைந்ததால், சென்னையில் மழை பெய்துள்ளது. அதேபோல் மாலை நேரங்களில் தரைகாற்றும், கடல்காற்றும் ஒன்றிணைவதால் கோடை மழை பெய்து வருகிறது. வரும் காலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி காற்றின் திசைகேற்ப வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்துளளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.