மின் கட்டமைப்பை மேம்படுத்த 231 புதிய துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ் நாட்டில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள், பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க (Fuse-Off Call) மையங்கள். 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்னகம் (9498794987) மூலம் 24 மணி நேரமும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் புகார்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள் )Battery Energy Storage Systems(, நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையையும் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்க உறுதிப் பூண்டுள்ளது. மின் விநியோக கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் கோளாறுகளை மின்னகம் சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் தெரிவித்து உடனடி சேவையைப் பெறலாம்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மின் பழுது காரணமாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்திட அறிவுறுத்தினார்கள். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும். மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் ஆணையிட்டார்கள்.

சென்னையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும், அக்குழுவினர் அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பழுதினைச் சரி செய்திடவும், பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்றிட வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல்குமார். தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார். இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் /மின்சார வாரியத் தலைவர் மரு. ஜெ. ராதாதிருஷ்ணன், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.மு.அ. சித்திக், இ.ஆ.ப., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு. அணில் மேஷ்ராம். இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ், இ.ஆ.ப., பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. பி.என். ஸ்ரீதர். இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.