அனைவரும் ஒருங்கிணைந்து போவதுதான் ஓபிஎஸ் எண்ணம் – புகழேந்தி

அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து போவதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம் என அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.   சென்னை ஆர் கே சாலையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி…

அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து போவதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம் என அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

 

சென்னை ஆர் கே சாலையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்பு நேற்றைய தினம் வந்துள்ளது என்றார். தீர்ப்பை வெற்றிகரமாக பெற்ற ஓ.பன்னீர்செல்வம் பெரிய ஆரவாரம் இல்லாமல் இருப்பதாகவும், எங்கே போனாலும் அவருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.

 

இது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த இயக்கம், தொண்டர்கள் மனதில் இப்படியே அடித்து கொண்டு போனால் சிதறுண்டு போய்விடும் என சாடினார். ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக பேசுவது, இழிவாக பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தேவையற்றது என எச்சரித்தார்.

 

அதிமுக கட்சியின் சட்டதிட்ட விதி குறித்து எடப்பாடி பழனிசாமியை ஏமாற்றி வருவதாக தெரிவித்த அவர், தற்போது நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் நேரில் வந்தால் கூட தான் விவாதிக்க தயாராக உள்ளேன் என குறிப்பிட்டார். தீர்ப்பில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் பெரிய மனதுடன் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக பேசுகிறார்கள். கட்சியின் விதிகளே தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றும் கூறினார். உங்களிடம் தான் தலைமை நிலைய செயலாளர்,மாவட்ட செயலாளர் என பல பதவிகளை கொடுத்து விட்டு, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் அடைய துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா? என்றும் புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

 

எல்லோரும் ஒருங்கிணைந்து போவோம் என்பது தான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம் என குறிப்பிட்ட அவர் இரண்டு காலில் தான் நடந்து போக வேண்டும் என்றும் நான்கு காலில் தவழ்ந்து போக கூடாது என்றும் தெரிவித்தார். அனைவரும் இணைந்தால் தான் திமுகவை எதிர்க்க முடியும் என குறிப்பிட்ட அவர், பிரிந்தால் எப்படி எதிர்க்க முடியும்? என்றும் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.