கேரளா மாநிலம், பாலக்காடில் பல் துலக்கிவிட்டு குழந்தைக்கு முத்தம் கொடுக்குமாறு கூறிய மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காட்டில் அவினாஷ்-தீபிகா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் அவினாஷ் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலாக்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை பல் துலக்காமல் தனது குழந்தைக்கு முத்தமிட அவினாஷ் முற்பட்டபோது தீபிகா தடுத்திருக்கிறார். பல் துலக்கிவிட்டு குழந்தைக்கு முத்தம் கொடுக்குமாறு அவர் கோரியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில், ஆத்திரமடைந்த அவினாஷ் கத்தியால் மனைவி தீபிகாவை தாக்கியிருக்கிறார். தீபிகா அழுவதை அறிந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், தீபிகா உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவினாஷை காவலில் எடுத்து விசாரித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-மணிகண்டன்








