சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தியதன் எதிரொலியின் காரணமாக 30 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல நகரங்களில் இது சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளன. இதனையடுத்து அவ்வப்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் இந்த சீட்டு விற்பனை குறைந்தபாடில்லை.
நியூஸ் 7 தமிழ் களஆய்வு
இவ்வாறான சூழலில் நியூஸ் 7 தமிழ் நேரடியான கள ஆய்வை சேலம் மாவட்டத்தில் நடத்தியது. சேலம் மாநகர் தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு பேப்பரில் எழுதி விற்பனை செய்து வந்தது குறித்து நியூஸ்7 தமிழ் களஆய்வு நடத்தியது. அப்போது தாதகாப்பட்டி பகுதியில் டீக்கடை மற்றும் பேக்கரி கடையில் லாட்டரி சீட்டுகள் நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது அம்பலப்படுத்தப்பட்டது. விற்பனை செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாவண்யா உறுதியளித்திருந்தார்.
இது குறித்து ஆய்வு செய்ய சேலம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி, கைலாஷ், சித்தேஸ்வரன், கருப்பண்ணன், ராமு கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
30 பேர் கைது
இவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பர்களில் எழுதி விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அவற்றை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைதான 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 30 பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலத்தில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பரில் எழுதி விற்றலோ அல்லது நம்பர் லாட்டரி விற்றாலோ, விற்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று சேலம் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையிலும்..
இதேபோல் சென்னை புறநகரில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆவடி, அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் வீட்டிலேயே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.









