சொத்துக்காக மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் கோவை சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புஷ்பவள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் கணேசன் – பொன்னுத்தாய் தம்பதியினர்.…

மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் கோவை சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புஷ்பவள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் கணேசன் – பொன்னுத்தாய் தம்பதியினர். பரமக்குடியை சேர்ந்த இருவரும் கோவையில் கடந்த 22 ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஐடியில் வேலை பார்த்து வருகிறார், இளைய மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், பரமக்குடியில் உள்ள பொன்னுத்தாயின் சொத்தை விற்க வேண்டும் என்று கணேசன் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு பொன்னுதாய் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த சூழலில் சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவி இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்த மூத்த மகன் மதன்குமார், இருவரையும் சமாதானம் செய்துவைத்திருக்கிறார்.

தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதால் காலையில் இருந்து வீட்டில் எதுவும் சமைக்காமல் இருந்துள்ளனர். அதனால், சாப்பிடுவதற்கு எதாவது வாங்கி வருவதாக கூறிவிட்டு மதன்குமார் வீட்டில் இருந்து வெளியில் கிளம்பியிருக்கிறார்.

அப்போது தனியாக இருந்த தம்பதி இடையே தகராறு அதிகரிக்கவே வீட்டில் உள்ள அரிவாளால் கணேசன், பொன்னுத்தாயை சரமாரியாக வெட்டியுள்ளார். பொன்னுத்தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘சென்னையில், 2வது விமான நிலையம் அமைக்கப்படும்’ – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

கடைக்கு சென்று வீடு திரும்பிய மதன்குமார் தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு உரைந்து போயுள்ளார். இதற்கிடையே கணேசன் அரிவாளை காட்டி அக்கம் பக்கத்தினரை மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்காநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.