ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்தது, அவரது 12-வது மனைவி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 11 மனைவிகளின் நிலை என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தில், கவான் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தாராபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திர தூரி. இவருக்கு 12 திருமணங்கள் நடந்துள்ளன. திருமணம் செய்துகொண்ட மனைவிகள் ஒவ்வொருவரையும், சிறிது நாட்களில் அடித்து கொடுமைப்படுத்துவதோடு, உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்கள் அனைவரும் திருமணமான சிறிது நாட்களிலேயே ராமசந்திர தூரியை பிரிந்து சென்றுவிட்டனர்.
இதில் 12-வதாக திருமணம் செய்து கொண்ட, 40 வயது மதிக்கத்தக்க சாவித்ரி தேவி என்ற பெண்ணை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அடித்தே கொன்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடந்த அன்று இரவு ராமசந்திர தூரியும், அவரது மனைவி சாவித்ரி தேவியும், மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே, ஏற்பட்ட வாக்குவாத்தில் ஆத்திரம் அடைந்த ராமசந்திர தூரி, கட்டையை எடுத்து, மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவி உயிரிழந்தது தெரியாமல், அன்று இரவு அவரது அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார் ராமசந்திர தூரி. காலையில் கண்விழித்து பார்த்த ராமசந்திர தூரி, மனைவி எழாதது கண்டு அதிர்ச்சியடைந்து பரிசோதித்து பார்த்த பொது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதை அறிந்துகொண்ட அவரது மகன், நேராக அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் வினய் சாவ் என்பவரிடம் சென்று கூற, அவரும் உடனந்தியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து ராமச்சந்திரனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராமச்சந்திர தூரியின் முன்னாள் மனைவிகள் 11 பேர் யார்.. யார்.. எங்கே இருக்கின்றனர். அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








