திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகனேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆறுமுகநேரி- வாலவிளையில்
பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 3 ஆம் தேதி கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், ஐஸ்வர்ய லட்சுமி ஹோமம், உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கி நடைபெற்று வந்தது.
தொடர்ந்து இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு நான்காம் யாகசாலை துவங்கி பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்களை மேளதாளங்கள் முழங்க கோவிலின் விமான தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விமான கலசங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர்.







