மனைவியை கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத படி மஞ்சள், மிளகாய் பொடிகளை தூவி பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ்,தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வரும் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவரின் மனைவி சிவரஞ்சனி (வயது 27), இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமயபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டை விற்ற நரசிம்மராஜ், தனது மனைவி,குழந்தைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி ஆகியோருடன் தாளக்குடி சாய் நகர் அப்துல் கலாம் தெருவில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
நரசிம்மராஜூக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீடு விற்று கிடைத்த பணத்தை சூதாட்டத்தில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் நரசிம்மராஜ் சென்றுள்ளார்.
பின்னர் தனது மனைவி சிவரஞ்சனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறும், கொரோனா சரியானவுடன் வந்து அழைத்து கொள்வதாகவும் கூறி குழந்தைகளை மட்டும் அங்கு விட்டு விட்டு தாயுடன் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனிடையே, திருச்சியில் உள்ள சிவரஞ்சனியுடன் அடிக்கடி செல்போனில் பேசும் அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக பேசாமல் இருந்ததால், அவரை பார்ப்பதற்காக தாளகுடி சாய் நகருக்கு வந்துள்ளனர். ஆனால் அங்கு வீடு 3 நாட்களாக பூட்டிக்கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் தொிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்குள் பார்த்தபோது, சிவரஞ்சினியின் கால் மட்டும் தெரிந்துள்ளது.
பின்னர் அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, சிவரஞ்சினி கொலை செய்யப்பட்டு அவரது உடல் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், சூதாட்டத்தில் ஈடுபடுவதை கண்டித்த மனைவியை நரசிம்மராஜ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து, யாருக்கும் தெரிந்து விடகூடாது என்பதற்காக அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடியை தூவிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் தப்பி ஓடிய நரசிம்மராஜ் மற்றும் அவரது தாய் வசந்தகுமாரி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








