கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட மோதிரம் அணிந்துள்ள சந்திரபாபு நாயுடு..!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு 3 நாள் பயணமாக சித்தூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கையில் பிளாட்டினம் மோதிரம் அணிந்திருந்தார். அந்த மோதிரம் வித்தியாசமாக…

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு 3 நாள் பயணமாக சித்தூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரது கையில் பிளாட்டினம் மோதிரம் அணிந்திருந்தார். அந்த மோதிரம் வித்தியாசமாக இருந்ததால் கட்சியினர் மத்தியில் அது ராசிக்கல் மோதிரமாக இருக்குமோ அல்லது வேறு என்ன வகையான மோதிரம் என்று ஆர்வம் மேலெழ அவர்கள் மத்தியில் அது விவாதப் பொருளாக மாறியது.

சிலர் ஆர்வம் தாங்க முடியாமல் சந்திரபாபு நாயுடுவிடமே கேட்டுவிட்டனர். அப்போது அவர் தான் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து கூறினார். அவர் கூறியதாவது:

நான் அணிந்திருக்கும் மோதிரம் பிளாட்டினத்தில் செய்யப்பட்டது. இதில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. எனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கண்காணிப்பதற்கு இது உதவுகிறது. நான் எவ்வளவு நேரம் தூங்குகிறேன், எனது இதயத்துடிப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம், பழக்கவழக்கம் ஆகியவற்றை இந்த மோதிரம் கண்காணிக்கிறது.

இதுபோன்ற பல சாதனங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம்.  இதுபோன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒவ்வொரு தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

2024 பொதுத்தேர்தலுக்கு கட்சியினரை ஆயத்தப்படுத்துவதற்காக சித்தூரில் பயணம் மேற்கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. இந்த மாவட்டத்தில் தெலுங்கு கட்சி கடந்த தேர்தலில் ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் தான் வென்றது. பெரும்பாலான இடங்களை தற்போது ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அந்த ஒரு தொகுதியிலும் சந்திரபாபு நாயுடு தான் வென்றார். அவர் குப்பம் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.