ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்க்ஸ் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்ஸ் குறித்த ஒரு பட்டிமன்றத்திற்கு ஆளுநர் வந்தால் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் அனுப்பி வைத்திருக்கிற மார்க்ஸ் கதை என்ற புத்தகத்தை படியுங்கள். அப்படியாவது நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்று பார்ப்போம்.
இதையும் படிக்கவும் : சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்
தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன், என்று தமிழ்நாட்டை கொச்சைப்படுத்துகிறீர்கள், நீங்கள் இறங்கிய அதே பாணியில் நாங்கள் இறங்கினால், அதே பாணியில் இறங்கி கட்டாயப்படுத்தினால் ஆளுநர் மாளிகை என்பது உங்களுக்கு
சிறை கூடாரமாக மாறிவிடும் நிலை ஏற்படும். ஆளுநர் மாளிகை விட்டு நீங்கள் வெளியே வர முடியாது. வீதியில் பயணம் செய்ய முடியாது.
காவலர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் நல்லது தான். எங்களுக்கும், காவலர்களுக்கும் எந்த சண்டையும் இல்லை. எங்களுக்கும், அரசுக்கும் எந்த போராட்டமும் இல்லை. நீங்கள் தெரிவித்திருக்கிற இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால், நான் சொன்னதை திரும்ப பெறுகிறேன் என்று நீங்கள் அறிவிக்கும் வரை தமிழகத்தில் நீங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் சரி எந்த குக்கிராமத்திற்கு சென்றாலும் சரி, எந்த பட்டணத்துக்கு சென்றாலும் சரி, அங்கு செங்கொடி இயக்கத்தை சார்ந்தலவர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்துவார்கள்.
மார்க்சியம் என்பது மனிதனை வாழ வைக்கின்ற ஒரு மகத்தான தத்துவம். இன்றைக்கு உலகில் சம உரிமைக்காக எவன் போராடினாலும் அந்த போராளிகளுக்கு உந்து சத்தியாக இருக்கக்கூடியது மார்க்சிய தத்துவம் என்பதனை பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்றார்.







