செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவுக்கு எதிராக ஆளுநர் எந்த முடிவும் எடுக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்த்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு குறித்து முதலமைச்சருக்கு ஆளுநர் 5 பக்க அளவில் எழுதிய கடிதம் வெளியாகியது. அதில் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அட்டர்னி ஜெனரல் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன். செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் உத்தரவானது, என்னிடமிருந்து அடுத்து தகவல் தெரிவிக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக திருமாவளவனுடன், நமது நியூஸ் 7 செய்தியாளர் சுகந்தகுமார் நடத்திய கலந்துரையாடலில் அவர் கூறியிருப்பதாவது;
பாஜக ஆளாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதே பாஜகவின் செயல். மணிப்பூர் கலவரம் குறித்தும், செந்தில் பாலாஜி விவகாரம், ஆளுநர் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அது தொடர்பாக உடனடியாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும். முதலமைச்சரின் முடிவுக்கு எதிராக ஆளுநர் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிகார மீறலை ஆளுநர் செய்துள்ளார். ஆளுநர் தடுமாற்ற நிலையிலேயே செயல்படுகிறார். அவர் பின்வாங்கியிருக்கிறாரே தவிர மாறவில்லை. திமுக-விற்கு ஆளுநர் வேறு வழிகளில் இன்னும் நெருக்கடி கொடுப்பார்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









