ஈரோட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் நெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ நீட் தேர்வை பொறுத்தவரையில் முதலமைச்சர் விஜய் என்றைக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை என்பதை தெளிவாக முதல்வர் கூறி இருக்கிறார்” என்றார்.
முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து பேசிய அவர், “கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தமிழக அரசின் பிரதிநிதியாக கர்நாடகா மாநிலத்திற்கு சென்று காவேரி விவகாரம் குறித்து பேசினார்கள். இப்போது முதல்வர் விஜய் நேரடியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறார். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் தவறு என்று சொல்கிறீர்களா?.
காவிரி விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற முடியும் என்று நினைத்தால் அதை செய்யலாம், இல்லையென்றால் அதனைப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்றார்.
இதனைத்தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் அறிவிக்கப்படுமா கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக அரசுக்கு 13 லட்சத்து 32 கோடி கடன் உள்ளது. இதற்காக நாளொன்றுக்கு 328.8 கோடி ரூபாய் வட்டி கொடுக்கிறோம், இதை சரி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. கடந்த ஆட்சியில் திமுக இரண்டரை வருடங்கள் கழித்து தான் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கொடுத்த நிலை எங்களை மட்டும் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்குறீர்கள்” என்றார்.




