அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது; பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் தலைகீழ் மாற்றங்களைச்…

தமிழ்நாடு அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்ய நில நிர்வாக ஆணையர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக புதிய அரசாணை வெளியிடுவதற்கான கோப்பு வருவாய்த்துறை அமைச்சருக்கு அனுப்பப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நில அளவைத்துறையைப் பொறுத்தவரை டிராப்ட்ஸ் மேன், நில அளவையர் தொடங்கிக் கூடுதல் இயக்குனர் வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான் அடிப்படைக் கல்வித் தகுதி ஆகும். தொடக்க நிலையில் டிராப்ட்ஸ் மேன், நில அளவையர் உள்ளிட்ட பணிகளில் சேரும் பணியாளர்கள், அதன்பின் அனுபவம், செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் இயக்குனர் வரை பதவி உயர்வு பெறுவது தான் வழக்கம். ஆனால், இப்போது டிராப்ட்ஸ் மேன், நில அளவையர் ஆகிய பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படைக் கல்வித் தகுதியாக இருக்கும்; அத்துடன் பொறியியலில் பட்டப்படிப்பு படித்திருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருவாய்த்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியிடங்களைக் குறைத்து, தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் நில அளவையர் பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், தனியார் அளவையர் சான்றிதழ்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறியுள்ளார்.

பின்பு, தனியார் மயமாக்குவது தொடர்பான நில நிர்வாக ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால், ஏழாயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்படும் எனவும் ஏழாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, நில அளவை துறையில் இப்போதுள்ள நில தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.