தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில், சபரிமலை மாலை அணிந்திருந்த சிறுவர்களை மூன்று நாட்களாக வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சிறு குழந்தைகளின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, அவர்களின் கல்வியைப் பறிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற மதவெறிச் செயல்கள் தமிழகத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரானவை.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்ததில் இருந்து, தமிழகத்தில் இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களும், உணர்வுகளும் தொடர்ச்சியாகவும், திட்டமிட்டபடியும் அவமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசின் அப்பட்டமான இந்து விரோதப் போக்கின் காரணமாகவே, இதுபோன்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறத் துணிகின்றன. அரசு நிர்வாகத்தின் மௌனம், குற்றவாளிகளுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவே உள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறை மற்றும் கல்வித் துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இது போன்ற இந்து விரோதச் செயல்கள் தொடர்ந்தால், தமிழக பாஜக சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




