“மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய அரசு முயற்சிக்க வேண்டும்” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

குறைந்தக் கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை எதிர் கொள்ள, தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.35 கொடுத்து, 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு சுமந்து வரும் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் மேலும்
ரூ 1 லட்சம் கோடி அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாரம் குறைவான விலையில் வாங்க வாய்ப்பிருக்கும் நிலையில், அதனை தவிர்த்து விட்டு, வெளிச்சந்தைக்கு செல்வது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அரசு தரப்பிலும் எந்த விளக்கமும் வெளிவராத நிலையில் கொள்முதல் நடவடிக்கை மீது சந்தேக நிழல்கள் படிவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்பட்டு, குறைந்த விலையில் வெளிப்படையான முறையில் மின்சாரத்தை வாங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் உழைக்கும் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் மின்கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் திசை வழியில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதுடன், மின் வழித்தடங்களை  தனியார்மயமாக்கும் முயற்சியினையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் துறைக்கு மாற்றுவதில் போய் முடியும் என்பதால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதையும், வழித்தடங்களை தனியார் மயமாக்குவதையும் அரசு கைவிட வேண்டும்.

மின்கட்டண உயர்வுகளுக்கும், தட்டுப்பாடுகளுக்கும் முக்கியக் காரணம் ஒன்றிய மாநில அரசுகள் நாட்டின் அதிகரித்துவரும் மின் தேவைக்கேற்ப பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாததாகும். உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி மூலத்தனத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு மின்சார சட்டம், 2003யை பாஐக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. மின்சாரத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்து, ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவது என்ற பெயரில் மின்உற்பத்தி, மின்மாற்றுதல், விநியோகம், தொடரமைப்பு போன்றவற்றை தனித்தனியாக பிரித்து, அதன் வழியாக பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே இன்றைய அவலங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.

எனவே, இத்தகைய கொள்கையில் மாற்றம் வேண்டும்.பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழ்நாடு அரசு தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும். குறைந்தக் கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.