வத்தலகுண்டு அருகே செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர்
கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார
நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (29). இவர் மதுரையிலிருந்து தினமும் பணிக்காக வத்தலகுண்டு சென்று வருகிறார். மல்லனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ‘மக்களை தேடி மருத்துவம்’ பிரிவில் செவிலியராக பணியாற்றி வருபவர் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த செவிலியர் சுகன்யா (32). இவர் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த போது மருத்துவர் சீனிவாசன், செவிலியர் சுகன்யாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறு சுகன்யாவை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா ரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து செவிலியர் சுகன்யாவிடன் புகாரை பெற்று மருத்துவர் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்டபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







