அதிமுக கட்சி பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தநிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து, மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 22-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரிய மூர்த்தி தரப்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளதால், அந்த கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாகக் கருத வேண்டுமென வாதிடப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்றும், பொதுக்குழுவைத் தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் தொடர்ந்து வாதிடப்பட்டது.
அதிமுக கட்சி தரப்பில் விஜய பிரசாந்த் ஆஜராகி, மனுதாரர் சூரிய மூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என வாதிட்டனர். அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொதுக்குழுவிற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை நாளை தினத்திற்குத் தள்ளிவைத்தார்.








