அக்னிபாத் திட்டத்திற்கான அறிவிப்பாணை வெளியீடு

அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ராணுவம் வெளியிட்டுள்ளது. 10 அல்லது 12ம் வகுப்பு முடித்த 17.5 வயது முதல் 23 வயதுள்ள இளைஞர்களும் இளம் பெண்களும் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ராணுவம் வெளியிட்டுள்ளது.

10 அல்லது 12ம் வகுப்பு முடித்த 17.5 வயது முதல் 23 வயதுள்ள இளைஞர்களும் இளம் பெண்களும் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டு காலம் பணிபுரிவதற்கான திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த பணியில் சேர்பவர்களுக்கு முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு மூன்றரை ஆண்டு காலம் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்காலத்தில் இருந்தே அவர்களுக்கு முதல் ஆண்டில் 30 ஆயிரம் ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், திட்டத்திற்கான அறிவிப்பாணையை ராணுவம் வெளியிட்டுள்ளது.

அதில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்வதற்கான பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்றும், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அனைவரும்  https://joinindianarmy.nic.in என்ற  இணையதளத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிவீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ராணுவத்தில் தனித்துவமான ரேங்க் வழங்கப்படும் என்றும் அது வழக்கத்தில் உள்ளதைப் போல் அல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பணியாற்றும்போது பெறும் ரகசிய தகவல்களை வெளிப்படுத்துவதை தடுக்கும் சட்டம் அக்னிவீரர்களுக்கும் பொருந்தும் என்றும் பணியில் இணைபவர்கள் தங்கள் பணிக்காலத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட மாட்டாது என்றும் ராணுவத்தில் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னிவீரர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அவர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.