களக்காடு அருகே முயலை வேட்டையாடி கறி சமைத்த 6 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தில் ஒரு வீட்டில் முயல் கறி சமைப்பதற்காக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில், வனக்காப்பாளர்கள் ஆரோக்கிய செல்வன், ஜெயின்குமார் மற்றம் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வடக்கு மீனவன்குளம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இசக்கி மகன் கந்தையா (50) அவரின் வீட்டில் ஒரு கும்பல் முயல் கறியை சமைத்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதனைதொடர்ந்து முயல் கறி சமைத்த பூலத்தை சேர்ந்த சுப்பையா மகன் உடையார் (34), வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த சிவன் மகன் செல்லப்பாண்டி (33), சண்முகசுந்தரம் மகன் முருகன்(23), வெள்ளைபாண்டி மகன் கந்தையா (40), பேட்டை சங்கரபாண்டி மகன் விநாயகம்(28) மற்றும் வீட்டு உரிமையாளர் கந்தையா ஆகிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வடக்குமீணவன்குளம் பள்ளிக்கூடம் அருகே உள்ள பகுதியில் முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களுக்கு ஒருவருக்கு தலா 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
—அனகா காளமேகன்







