கடம்பூர் மலைப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட தாமதமாக வந்த வனத்துறையினரை விவசாயிகள் சிறை பிடித்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள எக்கத்தூர், பசுவனாபுரம்,
ஏலஞ்சி சோளத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளை
நிலங்களில் மக்காச்சோளம், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. பகல் நேரத்தில் மட்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் இந்த யானையை துரத்த, விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் ஏந்தியும் முயற்சி செய்து வந்தனர்.
இந்நிலையில் பசுவனாபுரம் கிராமத்தில் உள்ள குப்புசாமி என்பவரது
தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை பயிர்களை மிதித்து நாசம் செய்தது. இது குறித்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்த விவசாயிகள், உடனடியாக வந்து யானையை துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் காலதாமதமாக வனத்துறையினர் வந்ததால் ஒன்று திரண்ட விவசாயிகள்
வனத்துறையினர் வாகனத்தை சிறை பிடித்தனர். அதோடு அங்கிருந்து செல்ல விடாமல், தங்களுக்கு தீர்வு ஏற்படும் வரை விடமாட்டோம் என போராட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடம்பூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் அந்த ஒற்றை யானையை பத்து நாட்களுக்குள் துரத்தி விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வனத்துறையினர் உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
ரெ.வீரம்மாதேவி







