மெக்சிகோவில் தலைமறைவாக இருந்த பிரபல டெல்லி ரவுடி கைது!

தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தீபக் பாக்சரை, வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வைத்து போலீசார் கைது செய்த நிலையில், இன்று டெல்லி அழைத்து வந்தனர். இந்திய தலைநகர் டெல்லியில் ‘கோகி’ என்ற கும்பலின்…

தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தீபக் பாக்சரை, வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வைத்து போலீசார் கைது செய்த நிலையில், இன்று டெல்லி அழைத்து வந்தனர்.

இந்திய தலைநகர் டெல்லியில் ‘கோகி’ என்ற கும்பலின் தலைவராக இருப்பவர் பிரபல ரவுடி தீபக் பாக்சர். அடிதடி, கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி, அமித் குப்தா என்பவரை தீபக் பாக்சரின் கும்பலைச் சேர்ந்த அங்கித் குலியா சுட்டுக் கொலை செய்தார். இதை சமூக வலைதளங்கள் வாயிலாக தீபக் பாக்சரும் ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், தீபக் பாக்சரை கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களாக போலிசாரிடம் இருந்து தப்பி, தலைமறைவாக இருந்த தீபக் பாக்சரை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் உதவியுடன், மெக்சிகோவில் டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைதான தீபக் பாக்சரை இன்று விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்தனர்.

இதையும் படியுங்கள் : ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி தலிவால், “உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தப்பியோடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ போன்ற ஒரு இடத்தில் இருந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் முதன்முறையாக ஒரு குற்றவாளி கொண்டுவரப்பட்டது மிகப்பெரிய வெற்றியாகும். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தீபக் பாக்சரை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்தது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.