நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் , உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த
சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து, பிற்பகல்
மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில்,
வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, உதகை சுற்றியுள்ள பகுதிகளில்
அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது.
இதனால், உதகையிலிருந்து குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட
பகுதிகளுக்கு செல்லும் மலைப்பாதைகளில் நிலவியுள்ள மேகமூட்டத்தின்
காரணமாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை
ஒளிர விட்டபடி மலை பாதையில் வாகனங்களை இயக்கி சென்றனர்.
மேலும், உதகையில் அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய மழை காரணமாக குளிர் காலநிலை நிலவியுள்ளது. இதனால், அதிகாலை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மக்கள், ஸ்வெட்டர் மற்றும் தொப்பிகள் அணிந்து பணிக்கு சென்றனர்.
—கு.பாலமுருகன்







